திருப்புவனத்தில் சமுதாய கிணறுகள் ஆக்கிரமிப்பு
திருப்புவனம்; வைகை ஆறு பாயும் திருப்புவனம் ஒன்றியத்தில் வறட்சிக்குள்ளாகும் பகுதிகளில் 1983ல் அரசு சார்பில் நீர்வளம் மிக்க பகுதிகளில் சமுதாய கிணறுகள் தோண்டப்பட்டு அந்தந்த பகுதி விவசாயிகள் கொண்ட குழு அமைத்து கிணறுகளை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டன. திருப்புவனம் ஒன்றியத்தில் கே. பெத்தானேந்தல், டி.அதிகரை, லாடனேந்தல், வில்லியரேந்தல், வலையனேந்தல், டி. ஆலங்குளம், கட்டமன்கோட்டை, சொக்கநாதிருப்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சமுதாய கிணறுகள் அமைக்கப்பட்டன.கிணறுகள் அமைக்க முடியாத இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கிணறு அமைக்க வசதியில்லாத விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதன் மூலம் கத்தரி, வெண்டை, நெல் உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர்.கோடை காலத்திலும் திருப்புவனம் வட்டாரத்தில் விவசாயம் செழித்து வந்தது. போதிய பராமரிப்பு இன்றியும் அதிகாரிகள் கண்காணிக்க தவறியதாலும் சமுதாய கிணறுகள் வறண்டதுடன் பல இடங்களில் சமுதாய கிணறுகள் இருந்த இடம் தெரியாமல் சிதைந்து விட்டன. ஒருசில இடங்களில் சமுதாய கிணறுகள் தனியார் வசம் உள்ளதால் விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.சமுதாய கிணறுகளை ஆக்கிரமித்திருக்கும் பலரும் கிணற்றை பராமரிக்க சொந்தப்பணத்தை செலவு செய்துள்ளதாக கூறி மற்ற விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க மறுக்கின்றனர். அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அரசு கிணற்றை ஆக்கிரமித்து மற்ற விவசாயிகளை தவிக்க விடுபவர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.