ஆழ்துளை கிணறுகளுக்கு 11 ஆண்டாக மின் இணைப்பு இல்லை விவசாயிகள் சங்கம் புகார்
சிவகங்கை: தமிழகத்தில் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் மானியத்தில் அமைத்த 1,520 ஆழ்துளை கிணறுகளுக்கு 11 ஆண்டாக இலவச மின் இணைப்பு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 2014ம் ஆண்டு பிற்பட்டோர் நலத்துறை மூலம் தலா ரூ.1 லட்சம் செலவில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டம் அறிமுகம் செய்தனர். இந்த மாவட்டங்களில் 1,520 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, விவசாயிகள் மின் இணைப்பிற்காக காத்திருக்கின்றனர். கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு பெற்றுத்தரும் முயற்சியை பிற்பட்டோர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும்.கிணறு அமைத்து 11 ஆண்டுகளாகியும் இதுவரை இலவச மின் இணைப்பு வழங்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ரூ.80 கோடி கட்டுவதில் இழுபறி விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் வீரபாண்டியன் கூறியதாவது: இது குறித்து சென்னை பிற்பட்டோர் நலத்துறையில் விசாரித்தோம். அதற்கு இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரியத்திற்கு பிற்பட்டோர் நலத்துறை ரூ.80 கோடி வரை கட்டவேண்டும். அந்த தொகையை விடுவித்தால் தான் இலவச மின் இணைப்பு வழங்க முடியும் என மின்வாரியம் தெரிவித்துவிட்டது. அந்த தொகையை கட்டாததால் 11 ஆண்டாக மானியத்தில் போட்ட ஆழ்துளை கிணறுகள் வீணாகிறது என்றார்.