உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிமென்ட் கால்வாய் கட்டுவதில் முறைகேடு விவசாயிகள் புகார் 

 சிமென்ட் கால்வாய் கட்டுவதில் முறைகேடு விவசாயிகள் புகார் 

சிவகங்கை: சிவகங்கை அருகே மேலப்பூங்குடியில் ரூ.28.88 கோடியில் ஷீல்டு கால்வாய் கட்டுமான பணியின் போதே சிமென்ட் பூச்சு சிதிலமடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பதன் மூலம் மதுரை மாவட்டம், மேலுார் அருகே குறிச்சிபட்டி கண்மாயில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள ஷீல்டு கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளராதினிபட்டி, திருமலை, சாலுார், திருமன்பட்டி, சோழபுரம் எட்டிச்சேரி கண்மாய் வரை ஒவ்வொரு முறையும் அக்., முதல் ஜன., வரை ரெகுலர் ஆயக்கட்டு பகுதியான இக்கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும். ஷீல்டு கால்வாய் பாசன பகுதிக்குட்பட்ட 41 கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு, 1,748.25 ஏக்கர் விவசாய நிலங்கள் ஒரு போக நெல் சாகுபடி செய்யப்படும். பல ஆண்டாக ஷீல்டு கால்வாய் மண் கால்வாயாக இருந்ததால், பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கண்மாய்களில் சேர்வதில்லை. இதனால் ஒரு போக நெல் சாகுபடி செய்வதே போராட்டமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கால்வாய் பணிக்கு ரூ.28.88 கோடி அ.தி.மு.க., ஆட்சியில் மண் கால்வாய் துார்வாரப்பட்டது. 2025 ஜன., 22 ம் தேதி சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின், ஷீல்டு கால்வாயில் சிமென்ட் கால்வாய் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார். ஷீல்டு கால்வாயில் 6 கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் சுவருடன் கூடிய கால்வாயும், 2 கி.மீ.,க்கு மண் கால்வாயை ஆழப்படுத்தி, கரையில் உள்ள மண்ணின் மேல் சிமென்ட் பூசி கால்வாய் கட்டும் பணி செய்து வருகின்றனர். பொதுப் பணித்துறை மேற்பார்வையில் நடக்கும் இப்பணி முறையாக நடக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 2 கி.மீ., துாரம் மண் கால்வாயை ஆழப்படுத்தி, கரையில் வெறும் 2 இன்ச்-க்கு மட்டுமே சிமென்ட் பூசி செல்கின்றனர். இதனால் அணையில் நீர் திறக்கும் போது, சிமென்ட் பூச்சு சிதைந்து, கரைகள் உடைந்து தண்ணீர் விரயமாகும். தற்போது கட்டப்பட்டு வரும் சிமென்ட் கால்வாயும், திறப்பதற்கு முன்பே சிதிலமடைந்தும், தடுப்பு சுவர் சிமென்ட் பூச்சு வெடித்தும் காணப்படுகின்றன. மேலுார் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறியதாவது: குறிச்சிபட்டி கண்மாய் முதல் சாலுார் வரையிலான 8 கி.மீ., துாரத்தில் 6 கி.மீ., துாரம் பள்ளமாக இருப்பதால், அங்கு தண்ணீர் தேங்கி செல்லும் போது கரை உடையாமல் இருக்க கான்கிரீட் சுவருடன் கூடிய கால்வாய் கட்டுகிறோம். அதே நேரம் எஞ்சிய 2 கி.மீ., துாரம் மேடான பகுதியாக இருப்பதால், கண்மாய்களில் இருந்து தண்ணீர் வேகமாக செல்லும் நோக்கத்தில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அளித்த அறிவுரைப்படி தான் கால்வாய் தடுப்பு மண்ணின் மீது சிமென்ட் கொண்டு பூசி வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ