தேங்காய் விலை அதிகரிக்க கூடும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு...
தென்மாவட்டங்களில் சோழவந்தான், திருப்புவனம், சிங்கம்புணரி பகுதிகளில் தென்னை விவசாயம் பெருமளவு நடக்கிறது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் 1.5 லட்சம் தென்னை மரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் தேங்காய்கள் தரமானதாக இருப்பதால் மத்திய, உத்தர பிரதேசம், உத்ரகண்ட், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனையாகிறது.இதற்காக வியாபாரிகள் 20 க்கும் மேற்பட்ட கோடவுன்களில் தேங்காய்களை வைத்து, வடமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். சபரிமலை, பழநி சீசன், வடமாநில திருவிழா என அடுத்தடுத்து விழாக்கள் நடந்ததால், கடந்த மாதம் வரை தேங்காய்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இது தவிர திருப்புவனம் பகுதி தென்னை மரங்களில் வெள்ளைப்பூச்சி தாக்குதலால் விளைச்சல் குறைந்துள்ளது. தேங்காய்க்கு தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரித்து காணப்பட்டன.மொத்த விற்பனை விலையில் ஒரு தேங்காய் ரூ.13 முதல் 17 வரை விற்கப்பட்டது. தற்போது வடமாநிலங்களில் திருவிழா சீசன், சபரிமலை சீசன் முடிந்ததாலும் தேங்காய் விலையும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மற்ற மார்க்கெட்களில் தேங்காய்கள் எடை கணக்கில் விற்கப்பட்டாலும், திருப்புவனத்தில் மட்டுமே எண்ணிக்கை அடிப்படையில் விற்கின்றனர். ஒரு தேங்காய் 250 கிராமில் இருந்தால் அதன விலை ரூ.13க்கு விற்கின்றனர்.தற்போது தேங்காய் வரத்து சீசனாக இருப்பதால், இன்னும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். திருப்புவனத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டாலும் உள்ளுரில் சில்லறை விற்பனையில் விலை குறையவே இல்லை. மொத்த விலை அதிகரித்தால் சில்லறையிலும் விலையை அதிகரிக்கும் வியாபாரிகள் விலை சரியும் போது குறைப்பதில்லை.எனவே தேங்காய் விற்பனையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தை மாத முகூர்த்த காலங்கள், தைப்பூச விழா போன்ற காரணத்தால் தேங்காய் விலை அதிகரிக்க கூடும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.