காரைக்குடி அருகே தொடர் மழை நாற்று நடும் பணியில் விவசாயிகள்
காரைக்குடி: காரைக்குடி அருகே தொடர் மழை காரணமாக விவசாயிகள் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.காரைக்குடி கோட்டையூர் பள்ளத்துார் கண்டனுார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் கண்மாய்கள் நிரம்பி உள்ளன. சாக்கோட்டை ஒன்றியத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் விவசாயிகள் தங்களது வயல்களில் உழவுப் பணி முடித்து விதைப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கனமழை பெய்து கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் விவசாய பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.வேலங்குடி, பள்ளத்துார் அருகே விவசாயிகள் தங்களது வயல்களில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பகுதி விவசாயிகள்,ஆர்.என்.ஆர்., டீலக்ஸ் பொன்னி, ஏ.எஸ்.டி 16 எனும் குண்டு நெல் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு, உரம், விதைநெல், கூலி என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும்பாலும் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தொடர் மழை காரணமாக கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.