விவசாய கூலி உயர்வால் தவிக்கும் விவசாயிகள்
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் விவசாய பணிகளுக்கான கூலி கடந்தாண்டை விட அதிகரித்திருப்பதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழையை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது.வழக்கமாக செப்டம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை நவம்பரில் தொடங்கியுள்ள நிலையில் வைகை ஆற்றிலும் தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் விவசாயிகள் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.திருப்புவனம் பகுதியில் ஏ.டி.டீ., என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., கோ 50, கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.நாற்றங்கால் அமைப்பதற்கு முன்பாக வயலை உழவு செய்து, வரப்பு வெட்டி, பரம்பு அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும், கடந்தாண்டு வரப்பு வெட்ட ஒரு ஏக்கருக்கு நான்கு பேர் வேண்டும், நபர் ஒன்றுக்கு 400 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. பரம்பு அடிக்க உழவு மாட்டுக்கு ஏக்கருக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டது.இந்தாண்டு ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல நாற்று பறித்து நடவு செய்ய நபர் ஒன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்பட்டது காலை ஏழு மணிக்கு வந்து மாலை நான்கு மணி வரை வேலை நடைபெறும். இந்தாண்டு நாற்று நடவு செய்ய 400 ரூபாயாக கூலி உயர்ந்து விட்டது.விவசாயிகள் கூறுகையில்: வழக்கமாக ஏக்கருக்கு அறுவடை வரை 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்தாண்டு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாக வாய்ப்புண்டு, தொடர்ச்சியாக மழை, நோய் தாக்குதல் இன்றி இருந்தால் ஏக்கருக்கு 40 மூடை வரை கிடைக்கும். அப்படி கிடைத்தால் தான் ஓரளவிற்கு கடன் இல்லாமல் தப்பிக்கலாம், என்றனர்.வயல்களில் வரப்பு வெட்டி நாற்றங்கால் அமைத்துள்ள நிலையில் இரவில் கருவேல மர காடுகளில் இருந்து வரும் பன்றிகள் வரப்புகளை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.இதனால் வயல்களில் தண்ணீர் நிறுத்த முடிவதில்லை. மீண்டும் மீண்டும் வரப்பு வெட்ட செலவு செய்ய வேண்டியுள்ளது.மழவராயனேந்தல், முகவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் அதிகளவு விவசாய கூலி தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். வயல்களுக்கு வந்து செல்லவும் சரக்கு வாகன வாடகை என விவசாயத்தில் செலவீனம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.