அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச திட்டம் சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பேட்டி
சிவகங்கை:''சிறுபான்மையினர், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவருக்கும் அரசு இலவச திட்டங்கள் கிடைக்க அரசை வலியுறுத்த உள்ளோம் ''என சிவகங்கையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் ஜோஅருண் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சிவகங்கை ஆய்வு கூட்டத்தில் 30 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மசூதி, சர்ச் கட்ட முன் அனுமதி பெறுவதில் உள்ள பிரச்னை குறித்து கூறினர். சிறுபான்மையினருக்குரிய திட்டம், உரிமை மற்றும் பாதுகாப்பு, கல்வி உதவித்தொகை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு. சர்ச், மசூதி கட்டும் அனுமதியை ஒரு மாதத்திற்குள் வழங்க அரசை வலியுறுத்த உள்ளோம். சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த இரு அமைச்சர்களை மாற்றியுள்ளனர். இது போன்ற புகார்கள் மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவிக்கப்படும். சிறுபான்மையினருக்கான திட்டங்கள் சென்று சேர்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அரசு ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.அரசு உதவி பெறும் பள்ளி, சிறுபான்மையினர் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசின் இலவச திட்டங்களை கொடுக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. அது பற்றிவிவாதித்து வருகிறது. அதை நாங்களும் வலியுறுத்த உள்ளோம் என்றார். பிற்பட்டோர் ஆணைய கமிஷனர் சம்பத், கலெக்டர் ஆஷா அஜித், கமிஷன் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.