திருப்புவனத்தில் அடிக்கடி மின்வெட்டு
திருப்புவனம், : திருப்புவனத்தில் நாள் ஒன்றுக்கு பத்திற்கும் மேற்பட்ட முறை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். திருப்புவனத்தில் அரிசி மாவு மில்கள், இணையதள சேவை மையங்கள், வங்கிகள், தளியார் அரசு பள்ளிகள் என ஏராளமானவைகள் உள்ளன. இவற்றிற்கு திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மேலும் வீடுகள் தோறும் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், ஏ.சி., பிரிட்ஜ், டி.வி., என ஏராளமான மின்சாதன பொருட்கள் உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள மின் சாதனங்கள் பலவும் அதி நவீன மின்சாதனங்கள் ஆகும், எல்.இ.டி., டி.வி.,க்கள், பல்புகள் என பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் திடீர் திடீரென துண்டிக்கப்படுவதும் நீண்ட நேரம் கழித்து மீண்டும் வழங்குவதுமாக உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான காரணமும் தெரிவதில்லை. பெரும்பாலான வீடுகள், கடைகளில் இன்வெர்ட்டர், பேட்டரி வசதி இருந்தாலும் அவைகள் நீண்ட நேரத்திற்கு தாக்குப்பிடிப்பதில்லை. அதிலும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றில் உள்ள யூ.பி.எஸ்., பேட்டரி சாதனங்கள் திடீர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வருவதால் பழுதடைந்து வருகின்றன. திருப்புவனம் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி கிடையாது. யூ.பி.எஸ்.,மூலம் புறநோயாளிகள் பிரிவில் மட்டும் மின் விளக்குகள் எரியும், திடீர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே திருப்புவனத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.