தாலுகா அலுவலகம் முன் குப்பைகளுக்கு தீ வைப்பு; வாகன ஓட்டிகள் தவிப்பு
திருப்புவனம் ; திருப்புவனம் தாலுகா அலுவலகம் முன் தினசரி குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். செல்லப்பனேந்தல் விலக்கு அருகே திருப்புவனம் தாலுகா அலுவலகம் இரண்டு தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக திருப்புவனம் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் தினசரி சேரும் குப்பையை சேகரிக்க பேரூராட்சி பணியாளர்கள் யாரும் வருவது கிடையாது. தினசரி குப்பையை தாலுகா அலுவலக வாசலில் தீ வைத்து எரிக்கின்றனர். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மூச்சு திணறலும் ஏற்படுகிறது. மேலும் லாடனேந்தலில் தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தினசரி தாலுகா அலுவலகத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். தினசரி காலையில் தீ வைப்பதால் மாணவ, மாணவியர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.