காப்பீடு திட்டத்தால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் சிகிச்சை பெற முடியாமல் அலைக்கழிப்பு
மானாமதுரை, டிச.10-- தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடந்த 4 மாத காலமாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசு துறைகளின் கீழ் 14.05 லட்சம் ஊழியர்களில், நிரந்தரமாக 6.98 லட்சம் பேரும், 7.07 லட்சம் பேர் தற்காலிகமாக பணிபுரிகின்றனர். இது தவிர அரசு பள்ளிகளில் மட்டுமே 2.28 லட்சம்ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76,360 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் மருத்துவ வசதி பெறும்நோக்கில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொருவரின் சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.300 வரை பிடித்தம் செய்கின்றனர். மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 4 மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்கள் தனியார் மருத்துவமனையில் விசாரிக்கையில், தமிழக அரசு, தனியார்மருத்துவமனையுடன் இணைந்து சிகிச்சை அளிக்கும் திட்டத்தை புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால் தனியார் மருத்துவமனையில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே அரசு ஊழியர்,ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தாருக்கு தனியார் மருத்துவமனையிலும் காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.