ஆறுகளில் குறையும் நீர்வரத்து அதிகரிக்காத நிலத்தடி நீர்மட்டம்
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதி ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. திருப்புத்துார் பகுதியில் பாலாறு, மணிமுத்தாற்றில் கடந்த 15 நாட்களாக நீர்வரத்து காணப்படுகிறது. பாலாற்றில் அவ்வப்போது வந்து திருவுடையார்பட்டி அணைக்கட்டு வரை வந்தது.நேற்று கோட்டையிருப்பு அணைக்கட்டுடன் பாலாற்று நீர்வரத்து நின்று விட்டது. இதனால் திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு நீர்வரத்தில்லாமல் உள்ளது. மணிமுத்தாற்றில் நீர்வரத்து குறைந்து பெயரளவிற்கு நீர் செல்கிறது. இருப்பினும் அப்பகுதி கண்மாய்கள் நிரம்பி விட்டன.மகிபாலன்பட்டி,கண்டவராயன்பட்டி அணைக்கட்டு வழியாக செல்லம் விருசுழியாற்றில் இது வரை நீர்வரத்தில்லை. அப்பகுதியில் பெய்யும் மழை நீர் மட்டுமே கண்மாய்களில் சேர்ந்துள்ளது.திருப்புத்துார் பகுதியில் மழை நீரால் சரிந்த நிலத்தடிநீர் வளம் ஓரளவு கூடியுள்ளது. இருப்பினும் ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டால் வளமையான நிலத்தடி நீர் மட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணிமுத்தாறு போல் பாலாறு, விருசுழியாற்றில் முழுமையான நீர்வரத்து ஏற்படாததால் பரவலாக திருப்புத்தூர் பகுதி நீர் மட்டம் செறிவடையவில்லை. தொடர் மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதுடன், நெல் சாகுபடியில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்க முடியும்.