| ADDED : நவ 15, 2025 05:22 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் கொய்யாப்பழத்தின் விலை கிலோ 160 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி சத்து இருப்பதால் குடற்புண், மலச்சிக்கல் உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. கொய்யாப்பழம் எப்போதும் விலை குறைவாகவே விற்பனை செய்யப்படும், சீனி கொய்யா, நாட்டு கொய்யா, சிவப்பு கொய்யா என மூன்று ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நாட்டு கொய்யா, சீனி கொய்யா உள்ளிட்டவை சுண்ணாம்பூர், திண்டுக்கல், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சீனி கொய்யாவின் விலை அதிகபட்சமாக 80 ரூபாய் என விற்பனை செய்யப்படும், சிவப்பு கொய்யா அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் ஆனால் தற்போது திருப்புவனத்தில் நாட்டு கொய்யா 100, சீனி கொய்யா கிலோ 160, சிவப்பு கொய்யா 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாபாரி கண்ணன் கூறுகையில் : கொய்யாப்பழம் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து விட்டது. கடந்த மூன்று மாதங்களாக கொய்யாப்பழம் வரத்தே இல்லை. கோடை காலங்களில் தான் கொய்யாப்பழம் அதிகமாக விளையும், தற்போது மழை காலம் என்பதால் விளைச்சல் குறைவு எனவே விலை அதிகரித்து விட்டது ஒரு நாளைக்கு 200 கிலோ வரை விற்பனையாகும், தற்போது 40கிலோ தான் விற்பனையாகிறது, என்றார். பொதுமக்கள் கூறுகையில்: ஒரு கிலோ ஆப்பிள் விலையே 100 முதல் 120 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.கொய்யாப்பழம் 200 ரூபாயை தொட்டு விட்டது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விலை குறையும். விலை அதிகரிப்பால் பலரையும் பாதித்துள்ளது, என்றனர்.