| ADDED : டிச 23, 2025 05:41 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே கல்லுாரணி ஊராட்சி இந்திரா நகரில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி தாம்பூல தட்டில் ஆதார், ரேஷன் கார்டுகளை வைத்து கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். மானாமதுரை அருகே கல்லுாரணி ஊராட்சி இந்திராநகரில் 12 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஊராட்சியில் வீட்டு வரி, மின் கட்டணமும் முறையாக செலுத்தி வருகின்றனர். இங்கு வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா கோரி 8 ஆண்டாக தாசில்தார், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் அவர்கள் வசிக்கும் வீட்டு இடங்களுக்கு பட்டா வழங்க மறுத்து வருகிறது. எனவே வீட்டு மனை பட்டா வழங்க கோரி இந்திராநகரை சேர்ந்த மக்கள் தங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை தாம்பூல தட்டில் வைத்து ஒப்படைக்கும் போராட்டத்தை நேற்று நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனுவை அளித்து விட்டு போராட்டத்தை முடித்து கொண்டனர்.