உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை

காரைக்குடியில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை

காரைக்குடி: காரைக்குடியில் நேற்று மாலை, இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. செட்டிநாடு பகுதியான காரைக்குடி கட்டடக்கலைக்கும், மழைநீர் சேகரிப்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பகுதியாகும். மழை நீரை சேகரிக்க ஆங்காங்கே குளங்களும், மழைநீர் குளங்களை சென்றடைய வரத்து கால்வாய்களும் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகையாலும், ஆக்கிரமிப்புகளாலும் வரத்து கால்வாய் மாயமாகி ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மழைநீர் குளங்களை சென்றடையாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. நேற்று மாலை காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், நகரின் முக்கிய சாலையான 100 அடி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வரத்து கால்வாய் பலவும் மாயமானதால் தண்ணீர் சாலையில் ஓடியதோடு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தவிர கணேசபுரம் அருகே உள்ள நல்லையன் ஆசாரி பள்ளி உட்பட பல பள்ளிகளிலும், தாலுகா அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழைக்காலம் தொடங்கும் முன்பு மாயமான மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள வரத்து கால்வாயை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !