ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிப்பு
இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார கிராம வயல்களில் ட்ரோன்கள் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் குண்டு மிளகாய்க்கு அடுத்த படியாக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையை நம்பி விவசாயிகள் மானாவாரியாக நெல் விதைகளை தூவினர். போதிய மழை பெய்யாத காரணத்தினால் பெரும்பாலான இடங்களில் நெல் விதைகள் முளைக்காததால் மீண்டும் விவசாயிகள் வயல்களை கிளறி விட்டு தற்போது நெல் விதைகளை தூவிய நிலையில் களைச் செடிகள் அதிகம் வளர்ந்து வருகிறது. தற்போது களைக்கொல்லி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் போதிய வேலை இல்லாமல் வெளியூர்களுக்கு சென்றதால் பல்வேறு இடங்களில் ட்ரோன்கள் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் பணியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.