சிறப்பு செயலாக்க திட்டங்களைகண்காணிக்க ஐ.ஏ.எஸ்.,கள்
சிவகங்கை:தமிழக அரசின் சிறப்பு செயலாக்க திட்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ்.,கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சர் உதயநிதி மாவட்ட வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தினார். மதுரை, சிவகங்கையில் நடத்திய கூட்டங்களில் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டது. அவர் ஆய்வின் போது பெரும்பாலும் அரசின் சிறப்பு செயலாக்க திட்டங்கள் இன்னும் அதிகளவில் மக்களை சென்றடைய வேண்டும் என வலியுறுத்தினார். அதன் எதிரொலியாக மாவட்ட வாரியாக நடைபெறும் சிறப்பு செயலாக்க திட்ட பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்துள்ளனர்.மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறை அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு சிறப்பு திட்ட செயலாக்கத்தின் பயன் எந்தளவிற்கு மக்களை சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை, அரசின் சிறப்பு செயலாக்க திட்ட செயலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரைக்கு தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் ஏ.அருண் தம்புராஜ், திண்டுக்கல்லுக்கு தமிழ்நாடு பசுமை ஆற்றல் நிறுவன நிர்வாக இயக்குனர் அனீஷ் சேகர், தேனிக்கு போக்குவரத்துத்துறை சிறப்பு செயலர் ஆர்.லில்லி, ராமநாதபுரத்திற்கு தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் எம்.வள்ளலார், சிவகங்கைக்கு மீன்வளத்துறை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி, விருதுநகருக்கு கைத்தறி துறை கமிஷனர் ஏ.சண்முகசுந்தரம் உட்பட 38 ஐ.ஏ.எஸ்.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.