தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால் விவசாயம் பாதிப்பு; இளையான்குடியில் இடு பொருள் செல்ல வழியில்லை
இளையான்குடி : இளையான்குடி,மானாமதுரையில் விவசாய பணி துவங்கியுள்ள நிலையில் வயல்களில் சாய்ந்த மின் கம்பங்களாலும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளாலும் விவசாய இடு பொருட்களையும், அறுவடை செய்யும் பயிர்களையும் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட இளையான்குடி,சாலைக்கிராமம்,சூராணம் முனைவென்றி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் செய்யப்படுகிறது. மானாமதுரை, இடைக்காட்டூர் ,முத்தனேந்தல், பீசர்பட்டினம், கால்பிரவு உள்ளிட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளிலும்,வைகை பூர்வீக பாசன பகுதிகளிலும் விவசாயிகள் நெல் விவசாயம் செய்கின்றனர். கிணறுகளில் உள்ள நீரை கொண்டு விவசாயம் செய்யும் நிலையில் பல இடங்களில் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து மின் கம்பி தாழ்வாக தொங்குவதால் நடந்து செல்லும் போது கூட விவசாயிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. தற்போது விவசாய பணி ஆரம்பித்துள்ள விவசாயிகள் வயல்களுக்கு இடுபொருட்களையும் மற்றும் டிராக்டர்கள், களை எடுக்கும் இயந்திரத்தை வயல்களுக்கு கொண்டு செல்லும்போது தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். முனைவென்றி விவசாயி சுரேஷ்கண்ணன் கூறியதாவது: முனைவென்றியில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சுற்றியுள்ள கச்சாத்தநல்லுார், கீழநெட்டூர், கோச்சடை,குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கரும்பு விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. உழவுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வயல்வெளிகளில் மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளதால் மின் கம்பிகளும் தாழ்வாக தொங்குகின்றன. அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள்,களை எடுக்கும் இயந்திரங்கள் வைத்துள்ள உரிமையாளர்கள் வாடகைக்கு உழவுப் பணிக்கு வர மறுக்கின்றனர். விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். அறுவடை செய்த நெல்,கரும்பு,பருத்தி,வாழை, போன்றவற்றையும் வாகனங்களில் வெளியே கொண்டு செல்வதற்கும் சிரமப்பட்டு வருகிறோம்.இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இளையான்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் குறித்து சர்வே செய்யப்பட்டு வருகிறது. புதிய மின் கம்பங்கள் அறுவடை காலத்திற்குள் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சரி செய்யும் பணி தாமதமாகி வருகிறது என்றனர்.