உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி தாலுகாவில் பட்டா கேட்டு சமையல் பாத்திரங்களோடு வந்ததால் அதிர்ச்சி

இளையான்குடி தாலுகாவில் பட்டா கேட்டு சமையல் பாத்திரங்களோடு வந்ததால் அதிர்ச்சி

இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட கீழாயூர்காலனியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 1980 மற்றும் 1994 ம் ஆண்டுகளில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், தெரு விளக்குகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு வழியில்லாமல் போனதை தொடர்ந்து இப்பகுதி மக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் கீழாயூர் காலனியைச் சேர்ந்த மக்கள் மற்றும் தியாகி இமானுவேல் பேரவையினர் வீட்டுமனை பட்டா வழங்க கோரி சமையல் பாத்திரங்களோடு குடியமர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இளையான்குடி தாசில்தார் முருகன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு ஏற்படாததையடுத்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளையான்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.தியாகி இமானுவேல் பேரவை நிர்வாகிகள்கூறியதாவது: கீழாயூர் காலனியில் வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கடந்த 20 வருடங்களுக்கு முன் ரத்து செய்து விட்டனர்.இதனை மீண்டும் வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தாலுகா அலுவலகம் வழியாக சென்ற மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மக்களை சந்தித்து குறைகளை கேட்காமல் சென்று விட்டார். தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து குடியமர்வு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியதால் வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை