தொடர்மழை: நெற்பயிரில் நோய் தாக்குதல் விவசாயிகள் தவிப்பு
காரைக்குடி: தொடர் மழைக்கு சாக்கோட்டை ஒன்றியத்தில் நடவு செய்த நெற்பயிர்களில் நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஒன்றியத்தில், 4,000 எக்டேரில் விவசாயிகள் மானாவாரி, கிணற்கு பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தொடர் மழையால் கண்மாய்களில் போதிய நீர் இருப்பு உள்ளதால், விவசாயிகள் அதிகளவில் நெல் சாகுபடியில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில் திருவேலங்குடி பகுதியில் தொடர் மழைக்கு, நெற்பயிரில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளன. நெற்பயிர் மஞ்சள் பூத்து, காய்ந்து வருகின்றன. பல முறை மருந்துகள் அடித்தும் நோய் தாக்கம் குறையவில்லை. ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தும், நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல் நோய் தாக்கிவிட்டதாக விவசாயிகள் -தெரிவித்தனர்.