மேலும் செய்திகள்
திறந்தவெளி கிணறுகள்; வனத்துறையினர் நோட்டீஸ்
26-Aug-2025
திருப்புவனம்; திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்புவனம் வட்டாரத்தில் வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வைகை ஆற்றை ஒட்டி ஏராளமான விவசாய திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருப்புவனம் வட்டாரத்தில் 40 எக்டேருக்கும் குறைவாக 95 சிறிய கண்மாய்களும், 40 எக்டேர் பரப்பளவிற்கும் அதிகமாக 105 பெரிய கண்மாய்கள் மூலமாக விவசாயம் நடைபெறுகிறது. நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாய தேவைகளுக்காக திறந்த வெளி கிணறுகள் அதிகளவில் அமைக்கப்பட்டன. இந்த கிணறுகள் மூலம் விவசாய பணிகள் நடந்தாலும் மழை காலங்களில் மழை நீர் சேமிக்கவும் இந்த கிணறுகள் பயன்பட்டன. இதன் மூலம் கிணறுகளில் நீரூற்று வற்றாமல் இருந்தன. ஆனால் சமீப காலமாக ஆழ்துளை கிணறுகளை அதிகளவில் விவசாயிகள் ஏற்படுத்தி வருகின்றனர். 100 அடி, 200 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து வந்த நிலையில் நீருற்று வற்றியதால் தற்போது 400 முதல் 600 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டியுள்ளது. காரணம் மழை காலங்களில் ஆழ்துளை கிணறுகளில் மழை நீர் சென்று சேரும்படி மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. 2019ல் 566 ஆழ்துளை கிணறு இருந்த நிலையில் 2024ல் 969 ஆழ்துளை கிணறுகளாக அதிகரித்துள்ளன. 2019ல் 1954 திறந்த வெளி கிணறுகள் இருந்த நிலையில் 2024ல் 1845 கிணறுகள் மட்டுமே உள்ளன. இதில் பக்கவாட்டு ஊற்றுகள் மூலம் கிணறுகளில் நீர்மட்டத்தை விவசாயிகள் உயர்த்தி வருகின்றனர். விவசாயிகள் தரப்பில் கூறுகையில் : கிராமப்புற விவசாயிகளுக்கு 100 நாள் திட்டத்தின் அடிப்படையில் கிணறு வெட்ட ஏழரை லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது. திருப்புவனம் நகரில் குடியிருக்கும் விவசாயிகளுக்கு திருப்புவனத்தை ஒட்டியே விவசாய நிலங்கள் உள்ளன. எங்களுக்கு கிடைப்பதில்லை. ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சமாக 100அடி வரை அமைக்க ரூ.2 லட்சமும், திறந்த வெளி கிணறுக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். வேறு வழியின்றிதான் ஆழ்துளை கிணறு அமைத்து வருகிறோம், என்றனர்.
26-Aug-2025