உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஜல்லிக்கட்டில் குட்டை ரக மாடுகள் ஆர்வலர்கள் கோரிக்கை

 ஜல்லிக்கட்டில் குட்டை ரக மாடுகள் ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவில் குட்டை ரக மாடுகளையும் அனுமதிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் குறிப்பிட்ட காலங்களுக்கு நடத்தி கொள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுபவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் புலிக்குளம் மாடு, மலை மாடு, காங்கேயம், உம்பளச்சேரி ஆகிய ரக மாடுகள் பங்கேற்று வருகின்றன. இந்த ரக மாடுகள் போலவே தஞ்சாவூர் குட்டை ரக மாடுகளும் ஆக்ரோஷமானவை. குட்டையாக இருந்தாலும் களத்தில் நின்று விளையாடும் வலிமை பெற்றவை. சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குட்டை ரக மாடுகளையும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தயார் செய்து வருகின்றனர். அவைகளுக்கும் மற்ற காளைகள் போல உணவு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டுகளில் இதுவரை குட்டை ரக மாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் ஆர்வமுடன் வளர்த்தும் போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை என ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். தி.புதுார் ஆதீஷ்வரன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உயரம் 120 செ.மீ., இருக்க வேண்டும், தஞ்சாவூர் குட்டை ரக மாடு 70 செ.மீ., உயரம் தான் இருக்கும். எனவே அனுமதியளிக்க மறுக்கின்றனர். குட்டை ரக மாடுகளுக்கும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் நீச்சல், நடை பயிற்சி, மண்ணை குத்தும் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது. மற்ற ரக மாடுகளை போலவே குட்டை ரக மாடுகளையும் பிடிக்கவே முடியாது, எனவே அவற்றிற்கும் அனுமதி தர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி