கண்ணமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் மாற்றம்
இளையான்குடி: கண்ணமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்குள் மோதல் நீடித்து வந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் நான்கு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்தனர். இளையான்குடி அருகேயுள்ள கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்த ஆதி திராவிட மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் பாகுபாடோடு நடத்தியதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. சிவகங்கை மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளியிலும், கிராம மக்களிடமும் விசாரணை நடத்தியதில் மாணவர் மீது பாகுபாடு காட்டுவதாக எழுந்த புகாரில் உண்மையில்லை என்பதும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்டதால் பல்வேறு பிரச்னை எழுந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து கிராம மக்களும் ஆசிரியர்கள் மீது பல்வேறு புகார்களை தெரிவித்ததால் ஆசிரியர்கள் அனுசியா, சந்திரா, மணிமேகலை, செல்லப்பாண்டியன் ஆகிய 4 பேரையும் இடமாறுதல் செய்து சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர்(தொ.க) ராஜேந்திரன் உத்தர விட்டார்.