காரைக்குடி குடிநீரில் சாக்கடை கலப்பா: கவுன்சிலர் சந்தேகம்
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில், காவிரி குடிநீர் திட்டப்பணியின் போது, சாக்கடை கால்வாய் மூடப்பட்டதால், குடிநீர் தொட்டிகளில் சாக்கடை நீர் கலந்து சுகாதாரக் கேடு நிலவுவதாக புகார் எழுந்துஉள்ளது.காரைக்குடி மாநகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. முதற் கட்டமாக 7 வார்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. 28 வது வார்டு கருணாநிதி நகரில் சாக்கடை கலந்து குடிநீர் வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.அ.தி.மு.க., கவுன்சிலர்பிரகாஷ் கூறுகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடந்தது. இப்பணியால் கழிவுநீர் கால்வாய் முழுவதும் மண்ணால் மூடப்பட்டு விட்டது. கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் சப்ளை செய்யும் நீரும் கருப்பு நிறமாக வருகிறது. இதில் சாக்கடை கலக்கிறதோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுஉள்ளது. மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.