காரைக்குடி டூ சிவகாசி அரசு பஸ் நிறுத்தம்: வியாபாரிகள் அவதி
காரைக்குடி: காரைக்குடியில் இருந்து சிவகாசிக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் சிரமப்பட்டனர். காரைக்குடியில் இருந்து மதுரை மார்க்கமாக சிவகாசிக்கு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. காரைக்குடியில் இருந்து அதிகாலை 4:00 மணி, காலை 7:20 மற்றும் காலை 9:47 க்கு சிவகாசிக்கு பஸ்கள் புறப்பட்டது. மறு மார்க்கமாக சிவகாசியில் இருந்து காலை 9:05, மதியம் 12:45 மற்றும் 2: 55 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வந்தது. சிவகாசி , மதுரையில் உள்ள கல்லூரிகளுக்கு காரைக்குடியில் இருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் சென்று வந்தனர். அதேபோல, பட்டாசு, காலண்டர், புத்தகம், நோட்டு உட்பட பல்வேறு வணிக பயன்பாட்டிற்காக வியாபாரிகள் சென்று வந்தனர். மதுரையில் இறங்கி பஸ் மாறி செல்லாமல் நேரடியாக சிவகாசி சென்றதால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தவிர மதுரைக்கு செல்வோர் கூட அதிகாலை செல்ல இந்த பஸ்சை பயன்படுத்தி வந்தனர். இந்த சிவகாசி காரைக்குடி அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்: காரைக்குடியில் இருந்து சிவகாசி சென்ற பயணிகளின் எண்ணிக்கை முன்பை விட மிகக் குறைவாக உள்ளது. மதுரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அதனால் நேரடியாக சிவகாசி சென்ற பஸ் மதுரை வரை மட்டுமே செல்கிறது. மதுரை சென்றவுடன், அதே நேரத்தில் அங்கிருந்து சிவகாசிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.