தடுப்புச்சுவர் இல்லாத கீழப்பட்டமங்கலம் ஊருணி
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே கீழப்பட்டமங்கலத்தில் ஊரணிக் கரையில் மண் சரிவை தடுக்க தடுப்புச் சுவர் கட்டி, மேம்படுத்த கிராமத்தினர் கோரியுள்ளனர்.கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் கீழப்பட்டமங்கலத்தில் திருப்புத்துார் ரோட்டில் உள்ளது செட்டியார் ஊரணி.இந்த ஊரணிக்கு கண்மாயிலிருந்தும், வயல்களிலிருந்தும் உபரி நீர் வரத்தால் பெருகுவது வழக்கம். தற்போதும் ஊரணியில் நீர் நிரம்பியுள்ளது. கரைகளில் படித்துறை இருந்தாலும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் ஊரணி உள்ளது.போதிய பராமரிப்பில்லாததால் படித்துறை பகுதியில் முட்செடிகள், ஊரணிக்குள் பாசி படர்ந்துள்ளது. சுற்றிலும் மண்கரையில் புதர் மண்டி உள்ளது. இப்பகுதியில் மழை நீர் சேமிப்பாக உள்ள இந்த ஊரணியை தொடர்ந்து பராமரிக்கவும், சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்டவும் கிராமத்தினர் கோரியுள்ளனர். குறிப்பாக ஊரணியின் கிழக்கு கரையை யொட்டி ரோடு செல்வதால் இப்பகுதியில் உள்ள மரங்களையும், கரையை மண் சரிவிலிருந்து பாதுகாக்க தடுப்புச்சுவர் எழுப்ப கோரியுள்ளனர்.