உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பறவைகள் சரணாலய வளர்ச்சி பணிகள் மந்தம்; கண்மாய் பணி கிராமத்தினர் அதிருப்தி

பறவைகள் சரணாலய வளர்ச்சி பணிகள் மந்தம்; கண்மாய் பணி கிராமத்தினர் அதிருப்தி

சிவகங்கை மாவட்டத்தின் ஒரே சரணாலயமாக உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். இங்கு வேட்டங்குடி,கொள்ளுக்குடி,சினனக்கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய்கள் உள்ளன. அதில் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் பறவைகள் அதிகமாக வலைசை போதல் ஆக வந்து கண்மாயிலுள்ள மரங்களில் கூடு கட்டி இனவிருத்தி செய்து திரும்புகின்றன. ஆகஸ்ட் இறுதி அல்லது செப். துவக்கத்தில் பறவைகள் வரத்துவங்கும்.

பணிகள் மந்தம்

தற்போது சரணாலயத்தில் பராமரிப்பு பணி மந்தமாக நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினரால் வழங்கப்பட்ட இழப்பீடு மற்றும் வளர்ச்சித்தொகை ரூ. 9 கோடிக்கான பணிகள் பறவைகள் வருகைக்கு முன் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேனிக்கண்மாயிலிருந்து வரத்துக்கால்வாய் துார் வாருதல், கண்மாய்களை ஆழப்படுத்துதல், கரைகளில் பார்வையாளர்கள் நடந்து செல்ல பேவர் பிளாக் பதித்து நடைபாதை, கண்மாயை சுற்றிலும் வேலி ஆகிய பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் திட்டமிட்டனர்.அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.வரத்துக்கால்வாய் துார்வாருதல், 3 கண்மாய்களில் ஆழப்படுத்தும் பணி உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்ட நிலையில் கிராமத்தினர் பணிகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். கண்மாய் பராமரிப்பு என்றால் மடை, கலுங்கை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரியுள்ளனர். இதனால் நடைபாதை, வேலி பணிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.

கண்மாய் பாதை பாதிப்பு

கொள்ளுக்குடிப்பட்டி கிராமத் தலைவர் மகேந்திரன் கூறுகையில், சரணாலயப் பணியில் கண்மாய் துார்வாரும் பணி தான் அதிகமாக உள்ளது. முதன்மையான பகுதியில் கூட இன்னமும் துார்வாரவில்லை. 2 கண்மாய்களில் நான்கு மடைகளை சீரமைக்க கோரியிருந்தோம். முதல் மடையில் முழுமையாக ஒரே அளவில் துாம்பு கட்டவில்லை. இரண்டாவது மடை முழுவதுமாக துார்ந்து விட்டது. . மேலும் கண்மாயில் உள்ள பழைய கிணற்றை மூடவும், கலுங்கில் ஷட்டர்களை பராமரிக்க கேட்டோம். கரையைப் பலப்படுத்தாமல் இருக்கும் கரையை உடைத்து சமப்படுத்தி அதில் நடைபாதை அமைக்க உள்ளனர். கிராமத்தினர் கரையை பாதையாக பயன்படுத்துவது பாதிக்கிறது.' என்றனர்.பறவைகளை கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தினர் பல ஆண்டுகளாக பாதுகாப்பதால் 3 கண்மாய்களில் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் தான் பறவைகள் அதிகமாக தங்கும். சில ஆண்டுகளாக கொள்ளுக்குடிப்பட்டியில் உள்ள 2 நிழற்கூடங்களின் பழுது நீக்கப்படவில்லை, சேதமான சிறுவர் பூங்கா சீரமைக்கப்படவில்லை. கிராமச் சாலை அமைத்த சில ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது. இப்படி பல காரணங்களால் தற்போது வனத்துறைக்கும் கிராமத்தினருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.

பணியில் அதிருப்தி

இதனால் திட்டப் பணிகள் மீதான கிராமத்தினர் அதிருப்தி அதிகரித்து வருகிறது. தங்கள் கிராமத்தின் வளர்ச்சி,விவசாயத்தை புறக்கணிப்பதாக கிராமத்தினர் கருதுகின்றனர். இதனால் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் பறவைகள் வருகை துவங்கி விடும். அதற்குள் கண்மாய் மடை, நடைபாதை,வேலி பணிகளை நிறைவேற்ற வேண்டும். பறவைகள் வந்தால் பணிகள் செய்ய முடியாது. இதனால் பார்வையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து பணிகளை விரைவு படுத்த வேண்டியது அவசியமாகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை