| ADDED : நவ 18, 2025 04:07 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் கண்மாயில் மடைகள் சேதமடைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருவது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 30 ஏக்கர் பரப்பளவுள்ள மடப்புரம் கண்மாயை நம்பி ஆயிரம் ஏக்கரில் தென்னை, நெல், வாழை உள்ளிட்டவை பயிரிடப் படுகின்றன. பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து மடப்புரம் கண்மாய்க்கு தண்ணீர் வரும். மடப்புரம் கண்மாய் நிரம்பிய பின் ஏனாதி, தேளி கண்மாய்களுக்கு தண்ணீர் சங்கிலி தொடர்போல செல்லும். பொதுப்பணித்துறை சருகணியாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட மடப்புரம் கண்மாயில் பாசனத்திற்கு திறக்க ஐந்து மடைகள் கட்டப்பட்டு உள்ளன. முண்டு கற்களாக கட்டப்பட்ட மடைகள் சேதமடைந்ததால் கண்மாய் தண்ணீரை பாசன தேவைக்கு ஏற்ப திறக்கவும் அடைக்கவும் முடியா மல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட செயற்பொறியாளர். ராஜ்குமார், உதவி பொறி யாளர் சுரேஷ் உள்ளிட்ட அதி காரிகள் கண்மாய் மடைகளை ஆய்வு செய்தனர். கண்மாயில் தண்ணீர் இருப்பதால் மடைகளை சரி செய்ய முடியாது, தற்காலிகமாக தண்ணீரை திறக்கவும் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கண்மாயில் தண்ணீர் வற்றிய பின் மடைகளை புதுப்பித்து கட்டுவது குறித்து திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப் பட்ட உடன் மடைகள் கட்டப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர்.