மின் கட்டணம் கட்டாததால் எரியாத விளக்கு; இருளில் மானாமதுரை நான்கு வழிச்சாலை
மானாமதுரை: மானாமதுரை நான்கு வழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகளுக்கு மின் கட்டணம் கட்டாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விளக்குகள் எரியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருளில் தவிக்கின்றனர்.மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும், பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை இரு வழிச்சாலையும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.இந்நிலையில் நான்கு வழிச்சாலையிலிருந்து சர்வீஸ் ரோடு பிரியும் இடங்கள் மற்றும் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.மானாமதுரையில் கால்பிரவு, ராஜகம்பீரம், முத்தனேந்தல் ஆகிய இடங்களில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது.கடந்த ஒரு வாரமாக மேற்கண்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகளுக்கு நான்கு வழிச்சாலை நிர்வாகத்தினர் மின் கட்டணம் கட்டாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விளக்குகள் எரியாமல் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.