உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆளுகை செய்யும் ஆண்டவர் ஆற்றல் படுத்துவாராக

ஆளுகை செய்யும் ஆண்டவர் ஆற்றல் படுத்துவாராக

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இன்று நம்மை நம்பிக்கை கொள்ள அழைப்பு தருகிறது. நாம் வாழும் இச்சூழலில் எங்கு பார்த்தாலும் பலவிதமான பிரச்னைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திரும்பும் திசையெங்கும் துன்பங்கள் கண்ணுக்கு தெரிகின்றன.கொலைகள், கொள்ளைகள், வன்முறைகள், இயற்கை சீற்றங்கள், உயிரிழப்புகள் என்ற சூழலில் நம்பிக்கை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது. இதேநிலைதான் அன்றைய சூழலில் இயேசு இந்த மண்ணில் பிறந்தபோதும் இருந்தது. மக்கள் பல நோய்களால் துன்பபட்டனர். அவனை கடவுளின் சாபத்திற்கு ஆளானவன் என தள்ளி வைக்கும் நிலைதான் இருந்தது.ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்த மக்களிடம் ஆண்டவர் இயேசு பிறந்தார். அதுபோல இன்று நிலவும் இக்கட்டான சூழ்நிலைகள், நம்மைவிட்டு மறையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கையில் நம்மிடையே இறைவன் பிறந்திருக்கிறார். நம்பிக்கையோடு பயணிக்கும்போது கண்டிப்பாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சவால்களை துணிவோடு எதிர்கொள்கையில் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். சவால்களை கண்டு பின்வாங்காது, உறுதியான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க இந்நாளில் கிறிஸ்து நமக்கு அழைப்பு தருகிறார். அவரை பின்பற்றும் நாமும் துன்பங்களையும், சவால்களையும் கண்டு நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.இறை நம்பிக்கையோடு தடைகளை எதிர்கொண்டு பயணிக்கும்போது, வார்த்தைகளில் கவனமாக இருக்க அழைப்பு தருகிறார். வார்த்தையானது இறைவன் நம் வாழ்வாக இருப்பது போன்றது. நம் வார்த்தைகள் பலருக்கு வாழ்வு தருவதாக இருக்க வேண்டும்.இயேசு கிறிஸ்துவின் பிறப்பு செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர்கள் மகிழ்ச்சியும், பேரானந்தமும் அடைந்தது போல, ஒதுக்கப்பட்ட, கேட்பாரற்ற நிலையில் உள்ள மக்களோடு நற்செய்தியை பகிர்ந்து அவர்களை மகிழ்விப்போம். நமது நேர்மறையான நல்ல வார்த்தைகளால் ஒருவர் மற்றவரை பாராட்டுவோம். இதற்கே இறைவன் நமக்கு வார்த்தையின் வடிவில் அழைப்பு தருகிறார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுப்போராக, சோதனைகளை எதிர்கொண்டு... நம்பிக்கையோடு தொடர்ந்து... நேர்மறையான வார்த்தைகளோடு என்ற மூன்று முத்தான செய்திகளை உள்ளத்தில் இருத்தி.... பாலன் இயேசுவின் பாதையில் பயணிப்போம்.-டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்பிஷப்மதுரை, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., பேராயம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ