உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் எம்.பி.,- எம்.எல்.ஏ., குரல் கொடுப்பார்களா

திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் எம்.பி.,- எம்.எல்.ஏ., குரல் கொடுப்பார்களா

திருப்புவனம்: திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மானாமதுரையில் இருந்து பிரித்து கடந்த 2013ல் திருப்புவனம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. தாலுகா தலைநகருக்கு வேண்டிய டி.எஸ்.பி., அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவைகள் 11 வருடங்கள் கடந்தும் இன்று வரை வரவில்லை. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன.கோடையில் தீவிபத்து, சாலை விபத்து, கிணற்றில் விழுந்து கால்நடைகள் தவிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் மானாமதுரையில் இருந்து தான் தீயணைப்பு வீரர்கள், வாகனம் வர வேண்டியுள்ளது. திருப்புவனம் நகரின் கடைசியில் பொட்டப்பாளையம் உள்ளது. மானாமதுரையில் இருந்து வாகனம் திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மதுரை விரகனுார் ரிங்ரோடு என 60 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டும், இலந்தைகுளத்தில் சில நாட்களுக்கு முன் கிணற்றில் குளிக்கும் போது மூழ்கிய சட்டகல்லூரி மாணவர் உடலை மீட்க மானாமதுரையில் இருந்து வீரர்கள் வந்தனர்.இதனால் நீண்ட நேரம் உறவினர்கள் காத்து கிடந்தனர். இதுபோன்று பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு வீரர்கள் வர தாமதம் ஆவதால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில் தீயணைப்பு நிலையம் உள்ளது. திருப்புவனம், கல்லல், காளையார்கோயில் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.மற்ற ஊர்களை விட திருப்புவனத்திற்கு தீயணைப்பு நிலையம் மிகவும் அவசியம் ஆகும், தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. தீயணைப்பு நிலையம் இருந்தால் உடனடியாக தீயை அணைத்து இழப்பை தடுக்க முடியும்.பொதுமக்கள் கூறுகையில்: திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோர் குரல் கொடுக்க வேண்டும், தாலுகா தலைநகராக மாற்றி 11 வருடங்கள் ஆகியும் தீயணைப்பு நிலையம் வரவில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ