முளைப்பாரி திருவிழா
திருப்புவனம்: திருப்புவனம் புதுார் சின்ன மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடந்தது. சம்பா பருவத்தில் நெல் நடவு செய்ய மழை தேவை. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் மழை இந்தாண்டு இதுவரை பெய்ய வில்லை. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 22ம் தேதி முகூர்த்த கால் ஊன்றப்பட்டு விழா தொடங்கியது. 26ம் தேதி செவ்வாய்கிழமை முத்து பரப்புதல் நடந்தது. தினசரி ஆண்களும் பெண்களும் மழை வேண்டி முளைப்பாரி திண்ணையைச் சுற்றிலும் கும்மிபாட்டு பாடி வலம் வந்தனர். நேற்று மாலை முளைப் பாரியை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நீரில் கரைத்தனர்.