உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றம் செய்யப்படாத பெயர் பலகை: அதிகாரிகள் தயக்கம்

மாற்றம் செய்யப்படாத பெயர் பலகை: அதிகாரிகள் தயக்கம்

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பதவி காலம் முடிவடைந்தும் இன்று வரை அவர்களின் பெயர் பலகைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடந்து தலைவர்கள் , உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதவி காலம் 2024 உடன் முடிவடைந்து விட்டது. தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒரு சில ஊராட்சிகளுக்கு தாமதமாக தேர்தல் நடந்தன. அவர்களுக்கு இன்னமும் பதவி காலம் முடிவடையவில்லை. மற்றவர்களுக்கு பதவி காலம் முடிவடைந்து அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களாக பொறுப்பேற்று கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 445 ஊராட்சிகள் உள்ளன இவற்றின் தலைவர்களுக்கு பதவி காலம் 2024 உடன் முடிவடைந்து விட்டது. ஊராட்சி அலுவலகம், கிராம சேவை மையம், ஊராட்சி எல்லை பெயர் பலகை உள்ளிட்டவற்றில் அந்தந்த ஊராட்சி தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டன. பதவி காலம் முடிவடைந்த உடன் அவற்றை அகற்ற வேண்டும், ஆனால் இன்று வரை அகற்றப்படவே இல்லை. காரணம் பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். பெயர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அதிகாரிகள் அவற்றை அகற்றாமல் உள்ளனர். கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள், ஆய்வு பணிகள் உள்ளிட்டவற்றிற்கு பதவி இழந்த ஊராட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்று அதிகாரிகளை வேலை ஏவுகின்றனர். தவறுகளை சுட்டி காட்டும் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றனர். ஊராட்சி செயலர்கள் சிலரும் பதவி இழந்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். விழாக்கள், திட்ட தொடக்கங்கள் ஆகியவற்றிற்கு அழைக்காவிட்டால் அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். எனவே தமிழக அரசு பதவி முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பெயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை