புத்தாண்டு பேட்டி
வேண்டும் பாதுகாப்பு சபதம்
எம்.அகிலா, எம்.எஸ்.டபுள்யூ., முதலாமாண்டு, காரைக்குடி: பிறக்கக்கூடிய புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் முன்னேறி வருகின்றனர். ஆனால், முன்னேற துடிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு சம்பவங்களும், வன்கொடுமைகளும் பெண்களிடையே அச்சத்தையே ஏற்படுத்தி வருகிறது. பிறக்கக்கூடிய புத்தாண்டாவது பெண்களுக்கு பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் அளிக்கும் வகையில் அமைவதற்கு அரசு மட்டுமின்றி அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். புத்தாண்டில் பிரச்னை தீரும்
பி.எஸ்.திருமாறன்,
வணிகர் நலச்சங்க செயலாளர், சிங்கம்புணரி: கொரோனாவுக்கு பிறகு கடுமையான
பின்னடைவுக்கு மத்தியில் மெல்ல தலைதுாக்கிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை
2024 ல் பெரிய முன்னேற்றத்தை காணாவிட்டாலும், தற்காலிக மனதிருப்தியை
கொடுத்து ஒரு சுமூகமான ஆண்டாகவே இருந்தது. இருந்தாலும் கடந்த 12 மாதத்தில்
வியாபாரிகள் பலர் கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு
பிரச்னைகளை சந்தித்தனர். வரும் 2025ம் ஆண்டு வரி, பணப்புழக்கம் உள்ளிட்ட
அனைத்து முக்கிய பிரச்னைகளும் சரியாக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஏமாற்றமாக அமைந்த ஆண்டு
அ.சங்கர்,
பொதுச்செயலாளர்தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், சிவகங்கை மாவட்டம்:
இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் உயிர் கோரிக்கையான அரசு, அரசு உதவி பெறும்,
உயர்,மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும்
பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 21
ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகிறோம். இது வரை கோரிக்கை
நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆண்டு அனைத்து இடைநிலை
ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவோம் என்று
நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். அதுபோல இ.எல்.,
சரண்டர், உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு திரும்ப வழங்குவார்கள் என்று
எதிர்பார்த்தோம் ஏமாற்றம் தான் கிடைத்தது. வரும் 2025ம் ஆண்டு நல்ல ஆண்டாக
இருக்க வேண்டும். பறிக்கப்பட்ட உரிமைகள் அனைத்தையும் வழங்குவார்கள் என்ற
நம்பிக்கையில் இருக்கிறோம். சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும். போராட்டம்
இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் புத்தாண்டில் பாதுகாப்பு வேண்டும்
எம்.முனீஸ்வரி மாயழகு, மானாமதுரை: 2024ம் ஆண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.மேலும் அரசு சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியதால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்விக்கு செல்லும் போது மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்குவதை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவு படுத்தியதை வரவேற்கிறோம். பிரதமர் மோடி அரசின் நீட் நுழைவுத்தேர்வு காரணமாக எனது மகள் மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாம் ஆண்டு படித்து வருவதால் மகிழ்ச்சியில் உள்ளேன். தமிழகத்தில் மகளிர்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க அடுத்த 2025வது ஆண்டிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மழை காலங்களில் வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை தேக்கி வைத்து வறட்சி காலங்களில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் அணைகள், தடுப்பணைகள்,பண்ணை குட்டைகள், புதிதாக ஏரி குளங்கள் வெட்டுதல் போன்ற பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.