பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை; பயணிகள் தவிப்பு
சிவகங்கை; சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் தண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் ரூ.2 கோடி செலவில் கட்டுமானப்பணி நடந்துவருகிறது. மற்றொரு பகுதியில் இருந்து 70க்கும் மேற்பட்ட பஸ்கள் ராமநாதபுரம், மதுரை, தொண்டி, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குடிப்பதற்கு குடி தண்ணீர் கிடையாது. பயணிகள் அமர இருக்கைகள் கிடையாது. பயணிகள் நிற்பதற்கான நடைபாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் உள்ளது. பெண்கள் பாலுாட்டும் அறை சேதப்படுத்தப்பட்டு மதுபிரியர்களின் அறையாக மாற்றப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறையில் எப்போதும் தண்ணீர் இருப்பதில்லை. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் வெளியூர் பயணிகள் சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர் உள்ளிட்ட சரக்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.