விதிகளை மீறும் இறைச்சி கடைகள் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
திருப்புவனம்: திருப்புவனத்தில் விதிகளை மீறி இயங்கி வரும் இறைச்சி கடைகள் மீது அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நோய் தொற்று அபாயம் உள்ளது.திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இறைச்சி கடைகளின் தரை, சுவர் எளிதில் சுத்தம் செய்யும்படி வழுவழுப்பான தரையாக இருக்க வேண்டும், கடைகளில் ரத்த கறை இருக்க கூடாது, ஈக்கள், கொசுக்கள் மொய்க்காமல் இருக்க வலை அமைப்பை ஏற்படுத்த வேண்டும், பொதுமக்கள் முன்னிலையில் ஆடு, கோழிகளை வெட்ட கூடாது, இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளுக்கு உரிய சான்று பெற வேண்டும், இறைச்சி கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும், இறைச்சி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சான்று பெற்றிருக்க வேண்டும் என 10க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதே கிடையாது.இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களிலும் திருப்புவனத்தில் இறைச்சி கடைகள் செயல்படுவது வாடிக்கையாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் இறைச்சி கடைகளில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.