போதையில் பஸ் ஓட்டிய ஆம்னி பஸ் டிரைவர் கைது
தேவகோட்டை:போதையில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவரை கைது செய்ததோடு அவரது லைசென்சை ரத்து செய்ய போலீசார் பரிந்துரைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்தவர் முகமது ஹஸ்பர் 27. நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சை ஓட்டி வந்தார். போதையில் இருந்தவர் பஸ்சை தாறுமாறாக இயக்கி உள்ளார். இரவு 10:00 மணிக்கு தேவகோட்டை அருகே உள்ள கோடிக்கோட்டை டோல்கேட் அருகே தேவகோட்டையை சேர்ந்தவரின் கார் மீது மோதியது. பஸ்சில் இருந்த பயணிகள் கத்தியுள்ளனர்.பஸ்சை நிறுத்தி டிரைவரை இறக்கிய போது போதையில் தள்ளாடி உள்ளார். இன்ஸ்பெக்டர் சரவணன், போலீசார் டிரைவர், பஸ், காரை கைப்பற்றி ஸ்டேஷன் கொண்டு சென்றனர். பயணிகள் ஒரு சிலரே இருந்ததால் இறக்கி விடப்பட்டனர். போதையில் பஸ் ஓட்டியது, கார் மீது மோதியது உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரைத்தனர்.