உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிர் காப்பீடுக்கு 24,683 எக்டேர் மட்டுமே பதிவு:   வேளாண் இணை இயக்குனர் தகவல்  

பயிர் காப்பீடுக்கு 24,683 எக்டேர் மட்டுமே பதிவு:   வேளாண் இணை இயக்குனர் தகவல்  

சிவகங்கை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் தற்போது வரை 24,683 எக்டேர் விவசாயிகள் பிரீமிய தொகை கட்டி நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர் என சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது,மாவட்டத்தில் ரபி சிறப்பு பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு தொகையில் 1.5 சதவீத பிரீமிய தொகையான ஏக்கருக்கு ரூ.496.98 யை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகள் மற்றும் இ -சேவை மையங்கள் மூலம் காப்பீட்டிற் கான பிரீமியர் தொகை செலுத்தவும். மாவட்ட அளவில் இதுவரை 69,582 எக்டேர் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளில் தற்போது வரை 24,683 எக்டேருக்கு மட்டுமே காப்பீட்டிற்கான பிரீமிய தொகை செலுத்தியுள்ளனர். இளையான்குடி வட்டாரத்தில் 8,068, காளையார்கோவிலில் 5,476, தேவகோட்டையில் 5,329, கண்ணங்குடியில் 2,181, மானாமதுரையில் 1,419, சாகோட்டையில் 913, கல்லலில் 579, சிவகங்கையில் 548, சிங்கம்புணரியில் 98, திருப்புத்தூரில் 56, திருப்புவனத்தில் 11 எக்டேருக்கு காப்பீடு செய்துள்ளனர். காப்பீட்டுக்கான பிரீமிய தொகை செலுத்த நவ., 15 இறுதி நாளாகும். எனவே நெற்பயிருக்கு காப்பீடு செய்யாத அனைத்து விவசாயிகளும் விரைந்து பிரீமிய தொகை கட்டி காப்பீடு செய்யவும். பதிவின் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ., விடம் பெற்ற அடங்கல் சான்று, ஆதார் எண்ணுடன் இணைத்த வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகலை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சாகுபடி செய்த கிராம பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்து, ரசீதை பெற்றுக்கொள்ளவும். எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு தாமதமின்றி உரிய காலத்தில் பயிர்காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறவும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !