உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நீர்நிலை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

நீர்நிலை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

சிவகங்கை: பருவ மழை காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என சிவகங்கையில் நடந்த வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிவகங்கையில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி முன்னிலை வகித்தார். பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் தங்கமணி வரவேற்றார். தேவகோட்டை சப் --கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த் உட்பட தாசில்தார் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பருவ மழை காலங்களில் மனித, கால்நடை உயிரிழப்பு, வீட்டு சேதங்களுக்கான நிவாரணத்தை வழங்க தாசில்தார்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு மழை நீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அந்தந்த பகுதி தாசில்தார்கள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். மழையால் இடியும் தன்மையில் உள்ள மண்சுவரிலான வீட்டில் வசிப்போரை முன்பே மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும். மழை காலங்களில் ஆற்றோர கரைகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என கண்டறியப்பட்டால் போலீசார் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். பாலங்களில் அடைப்பு ஏற்படாத வகையில் சீரமைக்க வேண்டும். வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிக்கு தேவையான மணல் மூடைகள், இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஊரக பகுதியில் பலவீனமான கண்மாய், ஊரணிகளை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டில் வெள்ளத்தால் பயிர்கள் பாதித்த விவசாய நிலங்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் வட்டாரம் தோறும் மருத்துவ அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். தண்ணீர் மூலம் பரவும் டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல் போன்றவை வராமல் தவிர்க்க மேல்நிலை குடிநீர் தொட்டிகளை குளோரின் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒரே தெருவில் 3 முதல் 5 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தால், சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !