சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் முட்டைகளை பரிசோதிக்க உத்தரவு; தினமலர் செய்தி எதிரொலி
சிவகங்கை; சிவகங்கை அருகே பள்ளி, அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டை வினியோகம் செய்தது தொடர்பாக ஜூன் 10 அன்று தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, முட்டையை நன்கு பரிசோதித்து மாணவர்களுக்கு வழங்க மைய பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி சத்துணவு மையங்களில் ஜூன் 9 ம் தேதி அன்று மாணவர்களுக்கு வழங்க வேகவைத்த போது அனைத்து முட்டைகளும் அழுகிய நிலையில் கிடந்தன. மாணவர்கள் அன்றைய தினம் முட்டையை பெறமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சத்துணவுத்துறை கமிஷனர், அனைத்து பள்ளி சத்துணவு, அங்கன்வாடி மைய பொறுப்பாளர், சமையலர்களுக்கு நல்ல மற்றும் அழுகிய முட்டை கண்டறிவது குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். சாப்பாடு சமைப்பதற்கு முன்பாக முட்டையை தண்ணீரில் போட்டு, அதன் மூலம் நல்ல, அழுகிய முட்டையை தேர்வு செய்ய வேண்டும். நல்ல முட்டையை காலை 11:00 மணிக்கு வேகவைத்து, தயாராக வைக்க வேண்டும். அழுகிய முட்டை இருந்தால், அவற்றை ஒதுக்கி வைத்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி சத்துணவு, அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் மிக கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ள 1273 பள்ளி சத்துணவு, 1552 அங்கன்வாடி மையங்களில் இருப்பில் உள்ள அனைத்து முட்டைகளையும் பரிசோதித்து, சமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.