உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் விளைச்சல் 4.91 லட்சம் டன் எதிர்பார்ப்பு

நெல் விளைச்சல் 4.91 லட்சம் டன் எதிர்பார்ப்பு

மாவட்ட அளவில் வழக்கத்தை விட மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்தது. இதனால், ஆறு, சிற்றாறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி, கண்மாய்களை நிரப்பி சென்றன. குறிப்பாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வைகை ஆற்றில் தண்ணீர் சென்றதால், பூர்வீக வைகை பாசன விவசாயிகள் ஆர்வமுடன் நெல் பயிரிட்டு தை பிறந்ததும், அறுவடை பணியை துவக்கியுள்ளனர்.பெரும்பாலான விவசாயிகள் விளைந்த நெற்பயிரை சக்கர நெல் அறுவடை இயந்திரம் மூலம் மணிக்கு ரூ.1,800, செயின் வகை அறுவடை இயந்திரத்தில் மணிக்கு ரூ.2,600 வாடகை செலுத்தி அறுவடைசெய்து வருகின்றனர். இதற்கு மேல் வாடகை கேட்பது குறித்து புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

4.91 லட்சம் டன் எதிர்பார்ப்பு

இந்நிலையில் நெல் நடவு செய்த விவசாயிகள் மார்ச் வரை அறுவடை செய்யும் வகையில் விளைந்து வருகிறது. 1.97 லட்சம் ஏக்கர் வயல்களில் நெல்லை அறுவடை செய்வதின் மூலம் 4.91 லட்சம் டன் நெல் விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். இதற்காக மாவட்ட அளவில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.வேளாண்மை துறை ஆலோசனையின்றி தனியாக ஜோதி ரக நெல்லை பயிரிட்ட விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை தற்போது கேரள மாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாவட்டத்தில் அதிகளவில் நெல்விளைச்சல் அடைந்ததின் மூலம், நெல் அறுவடையும் அதிகரித்துள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !