டோல்கேட் அருகே நின்ற அரசு பஸ் பயணிகள் தவிப்பு
தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தினைக்காத்தான்வயலில் இருந்து தேவகோட்டைக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக பயணிகள் அரசு டவுன் பஸ்சில் வந்து செல்கின்றனர். 22 கி.மீ.,. துாரமுள்ள இந்த கிராமத்திற்கு தேவகோட்டையில் இருந்து 6 நடையாக அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தேவகோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, தினைக்காத்தான்வயல் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது.கோடிக்கோட்டை டோல்கேட் அருகே டீசலின்றி 'ஏர்லாக்' ஆன நிலையில் டவுன் பஸ் அங்கேயே நின்று விட்டது. இதனால் அந்த பஸ்சில் சென்ற பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். இரவு 9:00 மணிக்கு மேல் திருவாடானை செல்லும் பஸ்சை இந்த கிராமத்திற்கு செல்ல அனுப்பி வைத்தனர். இதனால், பயணிகள் சிரமத்திற்கு இடையே சொந்த ஊர்களுக்கு சென்றனர்.