| ADDED : டிச 10, 2025 09:10 AM
திருப்பாச்சேத்தி: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தொலை துார பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மதுரை, காரைக்குடி, சேலம், ஈரோடு , திருநெல்வேலி கோவை கோட்டங்கள் சார்பாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலை துாரத்தில் இருந்து ஒரே பஸ்சில் பயணம் செய்ய மக்கள் விரும்புகின்றனர். சுமைகள், குழந்தைகளுடன் அடுத்தடுத்து பஸ் மாறி பயணம் செய்ய முடியாததால் தொலை துார பஸ்களில் காத்திருந்து பயணம் செய்கின்றனர். ஆனால் உரிய முறையில் பராமரிக்கப்படாததால் இந்த பஸ்கள் பாதி வழியில் பழுதாகி நின்று விடுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தினசரி பஸ்களில் டயர் பஞ்சர், கியர் விழுகாதது, கியர் பாக்ஸ் பெயிலியர் என பல்வேறு காரணங்களால் பஸ்கள் இடையில் நின்று விடுகிறது. பஸ்களில் பழுதை சரி செய்வதற்கான எந்த உபகரணமும் இருப்பதில்லை. ஸ்டெப்னி டயர் கூட பஸ்களில் இருப்பதில்லை, சின்ன சின்ன பழுதிற்கு கூட பணிமனையில் இருந்து ஊழியர்கள் வர வேண்டியுள்ளது. அதுவரை காத்திருக்க முடியாததால் அடுத்தடுத்து வரும் பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்புகின்றனர். பெரும்பாலும் பஸ்களில் சீட் கிடைப்பதே அரிது, பஸ்கள் பாதி வழியில் பழுதாகி விடுவதால் பயணிகள் அடுத்தடுத்து வரும் பஸ்களில் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேற்று காலை மதுரையில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பஸ்சின் கியர் ராடு பழுதானதால் திருப்பாச்சேத்தி டோல்கேட் அருகே ஓரம் கட்டி நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே போக்குவரத்து கழகங்களில் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.