பட்டமங்கலம் திருவிழா ஏப்.11ல் தேரோட்டம்
திருப்புத்துார்: பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர்,அழகு சவுந்தரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஏப்.11 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.இக்கோயிலில் ஏப்.3 ல் பங்குனித் திருவிழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் அம்பாள் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் யானை வாகனத்தில் அம்பாள் புறப்பாடாகி சூரசம்ஹாரம் நிகழ்த்தினார். நேற்று காலை பக்தர்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் கற்பகவிருட்ச வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதி வலம் வந்தார்.இன்று காலை தேருக்கு அலங்காரம் துவங்குகிறது. இரவில் குதிரைவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். நாளை ஏப்.11 ல் மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. ஏப்.12 ல் காலையில் மஞ்சுவிரட்டு, தீர்த்தம் கொடுத்தலும், இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும்.