உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறுத்தம்

மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறுத்தம்

மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியால் பிரேத பரிசோதனை அறைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதால் இறந்தவர்களின் உறவினர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 50க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களில் சிக்கி இறப்பவர்கள் மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தற்கொலை செய்து இறப்பவர்கள், ரயில்களில் அடிபட்டு இறப்பவர்கள் உடல்கள் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஏப்ரலில் பணிகள் துவங்கின.பிரேத பரிசோதனை அறைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதோடு, பிரேத பரிசோதனையை அறையை சுற்றி கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெறுவதால் இங்கு பிரேத பரிசோதனை நடக்கவில்லை. இப்பகுதியில் இறப்பவர்கள் உடல்கள் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இறந்தவர்களின் உறவினர்கள் பரிசோதனைக்கு பிறகு சிவகங்கையில் இருந்து உடலை பெற்று தங்களது ஊருக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். கட்டுமான பணி நிறைவு பெற குறைந்த பட்சம் ஒருவருடமாகும் நிலையில் மக்கள் அவதிப்படுவது தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !