டிஜிட்டலில் அசத்தும் அஞ்சல் துறை; கரையான் கட்டடத்தில் இயங்கும் அவலம்
காரைக்குடி; இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேவைகளுடன், டிஜிட்டல் வளர்ச்சி பெற்றாலும், கிராமப்புறங்களில் இன்றளவும் கரையான் அரித்த ஓட்டு கட்டடங்களில் அஞ்சலகங்கள் இயங்கி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய துறையாக அஞ்சல் துறை செயல்படுகிறது. நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளையும் இணைக்கும் முக்கிய பாலமாக அஞ்சல் துறை செயல்படுகிறது. தலைமை அஞ்சல் அலுவலகம், துணை அஞ்சல் அலுவலகம், கிளை அஞ்சல் அலுவலகம் என செயல்படும் அஞ்சல் அலுவலகம் மூலம் மணி ஆர்டர், புக்கிங் பார்சல், லாஜிஸ்டிக், விரைவு அஞ்சல், சேமிப்பு கணக்கு, தங்க பத்திரம், காப்பீட்டு சேவை என பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வாகனங்களின் ஆர்.சி., புக் அஞ்சலகம் மூலமே அனுப்பப்படுகிறது. அஞ்சல் துறை பல்வேறு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கி வரும் நிலையில் கிராமப்பகுதிகளில் உள்ள அஞ்சலகம், வாடகை, ஓட்டுக் கட்டத்திலேயே செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காரைக்குடி அருகே உள்ள கூத்தலுாரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சேதமடைந்த கரையான் அரித்த ஓட்டுக் கட்டடத்தில் இன்றளவும் அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், அஞ்சலகத்தில் உள்ள கோப்புகளுக்கும்,ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருகிறது. எனவே கிராமப்புறங்களில், பாதுகாப்பில்லாத ஓட்டுக்கட்டடத்தில் இயங்கும் அஞ்சலகத்தை பாதுகாப்பான கட்டடத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.