போஸ்ட் பேமென்ட் வங்கியில் அலைபேசி மூலம் சேவை தபால் கண்காணிப்பாளர் தகவல்
சிவகங்கை: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் அலைபேசி மூலம் சேவை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில், 2018 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு துவக்கினர். தமிழகத்தில் புதுமை பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பி.எம்., கிசான் கணக்கு, நுாறு நாள் வேலை கணக்கு, கர்ப்பிணிக்கான நிதி உதவி கணக்குகள், முதியோர் உதவி தொகை உட்பட அனைத்து விதமான அரசு மானியம், உதவி தொகை பெறும் கணக்குகளும் உள்ளன. இந்த கணக்குகளில் வாரிசுகள் நியமிக்காமல் உள்ளது. சேமிப்பு கணக்குகளில் வாரிசுதாரர் நியமிப்பதன் மூலம் கணக்குதாரர் இறப்பிற்கு பின் கணக்கில் உள்ள தொகையை எளிதில் வாரிசுதாரர்கள் பெற முடியும். எனவே தபால் வங்கிகளில் வாரிசுதாரர் நியமன வசதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அவரவர் அலைபேசியில் 'பிளே ஸ்டோரில்' ஐ.பி.பி.பீ.,செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அவரவர் வாரிசுகளை நியமித்தல், மாற்றம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் வங்கி கணக்குகளை இணைத்து ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம். இந்த செயலி மூலம் செல்வமகள், தங்கமகன், தபால் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும், என்றார்.