| ADDED : ஜன 24, 2024 04:59 AM
திருப்புத்துா : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தை பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி பிரகார வலம் வந்தார்.குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷம் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று மாலை 4:30 மணிக்கு நந்திதேவருக்கும், சுவாமிக்கும் பாஸ்கர் குருக்கள் பூஜை நடத்தினார். பலவித திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் ரிஷப வாகனத்தில் பிரதோஷநாதர்,அம்பாள் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர் புறப்பாடாகி பிரகாரங்களில் வலம் வந்தார். பக்தர்கள் பங்கேற்றனர்.* சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 18 வகை அபிஷேகம், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு பிரதோஷ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.* மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ விழாவில் மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. உற்சவர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை 3 முறை வலம் வந்தார். விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.