சான்றிதழ் உண்மை தன்மை அறிய கட்டணம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு
சிவகங்கை:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சான்றிதழ் உண்மை தன்மை அறிய பல்கலையில் கட்டணம் வசூலிக்காமல் சான்றிதழ் தர வேண்டுமென தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் சாமுவேல் கூறுகையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புதிதாக பணியில் சேரும்போது கல்விச் சான்று உண்மைத்தன்மை ஆராயப்படுகிறது. உயர் கல்விக்கான ஊதிய உயர்வுக்கும் தேர்வுநிலை சிறப்புநிலை பெறவும் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றுகளின் உண்மை தன்மை அரசுத்தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகங்கள் மூலம் கட்டணம் எதுவும் இன்றி சரி பார்த்து வழங்கப் படுகிறது. பட்டம், பட்ட மேற்படிப்புகளின் சான்று சம்பந்தப்பட்ட பல்கலைகளுக்கு அனுப்பப்படுகிறது. உண்மைத்தன்மை வழங்க பல்கலை ஒவ்வொன்றும் ரூ.1000 முதல் 2000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறது. பல்கலை மானியக்குழு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அரசுத் துறை மூலம் பட்டப்படிப்பு சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை அறிய கட்டணங்கள் எதுவும் இல்லாமல் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை பல்கலை உண்மைத்தன்மை அறிய கட்டணங்கள் எதுவும் பெறுவதில்லை. பாரதியார் பல்கலை உண்மைத்தன்மை சான்று பெற கட்டணங்கள் இல்லாமல் வழங்கப்படும் என அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற பல்கலையும் அரசு துறை மூலம் அனுப்பப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லாமல் உண்மை தன்மை சான்று வழங்க தமிழக அரசு உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.