உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் மரத்தை அகற்ற எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கோயில் மரத்தை அகற்ற எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் முனீஸ்வரர் கோயில் அருகில் உள்ள மரத்தை அங்கன்வாடி கட்டட பணிக்காக அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதுவயல் பேரூராட்சி 11 வது வார்டு மேலப்பள்ளி வாசல் தெருவில் அரச மரத்தின் கீழ் முனீஸ்வரர் கோயில் உள்ளது. இதன் அருகில் ரூ.12.50 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அரச மரத்துடன் கூடிய கோயிலை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதை கண்டித்து அப்பகுதியினர் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் தலைவர் முகமது மீராவிடம் மனு அளித்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி சமாதானம் செய்து அனுப்பினார். அப்பகுதி மக்கள் கூறியதாவது : முனீஸ்வரர் கோயிலை முன்னோர்கள் முதல் தற்போதைய தலைமுறையினர் வரை வழிபட்டு வருகின்றனர். அங்கன்வாடி கட்டடம் கட்டுவதாக கூறினர். கோயிலுக்கு இடத்தை கொஞ்சம் ஒதுக்கி விட்டு கட்டும்படி தெரிவித்தோம். சரி என்று தெரிவித்தனர். ஆனால் மரம் அரசு புறம்போக்கில் உள்ளது. மரத்தை நீங்கள் எடுக்க வேண்டும் அல்லது போலீஸ் உதவியுடன் நாங்கள் எடுப்போம் என்று நோட்டீஸ் அளித்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் கோயில், மரத்தை அகற்றக் கூடாது என பேரூராட்சியில் மனு அளித்துள்ளோம் என்றனர். தலைவர் முகமது மீரா கூறுகையில்,''மரத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கன்வாடி கட்டடம் கட்டும் மேல்பகுதியில் உள்ள கிளைகளை மட்டும் அகற்ற கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை