ஏப். 28 ல் மறியலில் ஈடுபட ரேஷன் விற்பனையாளர்கள் முடிவு
சிவகங்கை:''கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளை அரசு அழைத்து பேசி தீர்வு காணாவிடில் ஏப்., 28 ல் மண்டல வாரியாக மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு போன்ற பணிச்சுமை அதிகரித்துள்ளன. இதை போக்க வேண்டும். கல்வி தகுதிக்கு ஏற்ப இவர்களுக்கு சம்பளம் வழங்க ஊதிய குழு நியமித்து, 9 வது சம்பள கமிஷனுடன் சேர்க்க வேண்டும். ரேஷனில் அனைத்து பொருட்களையும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். எனவே சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, அமைச்சரும், அரசும் தீர்வு காண வேண்டும். இதனை அரசு செய்ய மறுத்தால், ஏப்., 28 ல் மதுரை, விழுப்புரம், திருச்சி போன்று மண்டல அளவில் ரேஷன் கடை விற்பனையாளர்களை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.